Wednesday, January 1, 2014

மசாலசீயம்

வடை போலவே ஒரு பலகாரம் மசாலசீயம்.  வடை கூட பல சமயங்களில் சரியாக வட்டமாக இருக்கணும், ஓட்டை சரியாக வரவேண்டும், எண்ணை குடிக்காமல் பார்த்துக் கொள்ளணும் என்றெல்லாம் ஒரு டென்ஷன் இருக்கும்.  ஆனால், மசாலசீயம் செய்வதற்கு மிக எளிதானது.  வடைக்குப் பதிலாகவும் இதனைச் செய்யலாம்.



தேவையானவை:

  • பச்சரிசி - 1 கப்
  • புழுங்கல் அரிசி - 1 தேக்கரண்டி
  • வெள்ளை உளுந்து - 1 கப்
  • ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி


மேலே உள்ளவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்த பின், மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரைத்துக் கொள்ளவும். [வடை அல்லது இட்லிக்கு ஆட்டும் உளுந்து பதத்தில்].  ஆட்டும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

தாளிக்க:

  • கடுகு - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கியது
  • சின்ன வெங்காயம் - 6-8
  • பச்சை மிளகாய் - 2-3
  • துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி


செய்முறை:

  • தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் நன்கு கலந்து கொள்ளவும்.
  • மிதமான சூட்டில் வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்தவுடன், மேலாக மாவை எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக எண்ணையில் இடவும். [அவ்வப்பொழுது மாவை நன்கு அடித்துப் பயன்படுத்தினால் சீயம் மிருதுவாக வரும், புகைப்படம் காண்க]
  • அவ்வப்பொழுது சீயங்களைத் திருப்பிக் கொண்டே இருக்கவும்.  பொன்னிறமாக மாறுகையில் எடுத்தால் சீயம் ரெடி.


Wednesday, December 25, 2013

தேங்காய் வெங்காயச் சட்னி

சமையல் பலவிதம் சட்னிகள் ஒவ்வொன்று புதுவிதம்.  தேங்காய்ச் சட்னியோ, தக்காளிச் சட்னியோ தான் அநேக தமிழ்க் குடும்பங்களில் பிரதானமாகத் தொட்டுக் கொள்ளச் செய்யப்படுகிறது.  'இன்றைக்கு இட்லிக்கு என்னம்மா தொட்டுக்கொள்ள?' என்று கேட்கும் பிள்ளைகளுக்கு மேலே கூறிய சட்னியைச் சொல்லும்போதே, 'ஓ அப்படியா' என்று அலுப்பு தட்டும் குரல் தான் கேட்கிறது.  செய்வதற்கு மிக எளிதான இந்த சட்னியை இன்று வீட்டில் செய்கையில் பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி.




தேவையானவை:

  • தேங்காய் - அரை மூடி
  • சின்ன வெங்காயம் - 5-7
  • வரமிளகாய் - 3
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவயான அளவு


தாளிக்க:

  • கடுகு
  • கறிவேப்பிலை
  • வரமிளகாய் - 1 சிறியது


செய்முறை:

  • தேவையானவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தாளிக்கும் பொருட்களைத் தாளித்து அரைத்த சட்னியில் மேல் விடவும்.



தென்னிந்தியத் தாளி

சமீபத்தில் தூர தேச பயணமாக ஆஸ்டின் வரை சென்று வர நேர்ந்தது.  வழியிலோ டாலஸ், தேசிக்களின் இந்தியா !!!  அதுவும் தென்னிந்தியாவுக்கு பெயர் பெற்றுத் தந்த உயர்தர சைவ உணவகம் சரவண பவன்.  விடுவோமா ?!  போகும் போது ஒரு முறை, ஆஸ்டினிலிருந்து திரும்பும்போது ஒரு முறை.  அடடா, குளிரில் கதவைத் திறந்தால், நம்மை முகத்தில் அறைந்து வரவேற்பது சரவணபவனின் சமையல் மணம்.

நடுங்கும் குளிரவில் ஒரு ஃபுல் மீல்ஸ் சொல்ல, அக்கம்பக்க மேசையில் இருந்தவர்கள் சற்று எங்களை ஒரு மாதிரி பார்க்கத் தான் செய்தார்கள்.  அநேகரின் மேசைகளில் தோசையும், பட்டூராவும் அலங்கரித்திருந்தன.   இதற்கெல்லாம் தளர்ந்துவிடுவோமா, என்ன ?  ஒரு பிடி பிடிக்கத் தான் செய்தோம்.  பிள்ளைகள் வழக்கம் போல சாதம் தவிர்த்து, பரோட்டாவும், பட்டூராவும் கேட்டுப் பெற்றனர்.

வீடு வந்து சேர்ந்தும், சரவணபவன் மணம் விட்ட பாடில்லை. தென்னிந்தியத் தாளி வீட்டில் செய்து பார்த்தால் என்ன என்று ஒரு எண்ணம்.  தோன்றிய நேரத்திலேயே பிள்ளைகள் லிஸ்ட் அடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  காரியத்தில் தொபுக்கடீர் என்று  குதித்து ஒரு முழுச் சாப்பாடு தயார் ஆன நிலையில், ஆஹா நமது வலை அடுப்படி அப்படியே கிடக்கிறதே என்ற எண்ணம் தோன்ற, இன்றைய சமையலின் புகைப்படத்தை இங்கே பகிர்ந்து, மேலும் பல நல்ல செய்முறைகளுடன் இனி அடிக்கடி சந்திப்போம் என்று சொல்லி மீண்டும் காலடி எடுத்து வைக்கிறேன்.  வழக்கம் போல உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் !!!



Saturday, October 17, 2009

ரிப்பன் பக்கோடா



தேவையானவை:
  • அரிசி மாவு - 1 1/2 கப்
  • கடலை மாவு - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • வெண்ணை - 2 டீஸ்ப்பூன்

அரைத்துக் கொள்ள:

  • வர மிளகாய் - 4
  • பூண்டு - 6 பல்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்ப்பூன்

செய்முறை:

  • அரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணை ஆகியவற்றுடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை இட்டுப் பிழியவும்.
  • பிழியும் போது ஒன்றன் மேல் ஒன்று விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • சற்று நேரத்தில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் போது எடுக்கவும்.

Tuesday, June 30, 2009

பிஸிபேலாபாத்



சிம்பிளா சொன்னா சாம்பார் சாதம் ! ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் ! பரவலா கர்நாடகத்தில் தோன்றியதாக இணையத்தின் மூலமும் நண்பர்களின் மூலமும் அறிகிறோம். சில ஆண்டுகளாகவே நம்ம ஊரிலும் ஊடு கட்ட ஆரம்பித்திருக்கிற‌து பிஸிபேலாபாத் :)) எங்க வீட்டுக் குட்டீஸின் பேவரிட் இந்திய உணவுகளில் ஒன்று.

இர‌ண்டு க‌ட்ட‌ங்க‌ளாக‌ செய்முறையைப் பிரித்து (மேய்ந்து....) எடுத்துக் கொள்வோம். முதலில் பிஸிபேலாபாத் பொடி அப்புற‌ம் பிஸிபேலாபாத்.

பிஸிபேலாபாத் பொடி

தேவையானவை:

  • வரமிளகாய் - 6
  • வெந்தயம் - சிறிதளவு
  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • பட்டை - சிறிதளவு
  • கிராம்பு - 2
  • உளுத்தம் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • கடலைப் பருப்பு - 2 டீஸ்ப்பூன்
  • மல்லி - 2 டீஸ்ப்பூன்
  • தேங்காய் - சிறிதளவு, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்


செய்முறை:

  • வாணலில் (எண்ணை விடாமல்) வரமிளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.
  • கடுகு வெடிக்கையில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • ஆறிய பின், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிஸிபேலாபாத் பொடி ரெடி.


பிஸிபேலாபாத்

தேவையானவை:
  • அரிசி - 1 கப்
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தக்காளி ‍ 1
  • பீன்ஸ் - 5
  • வெண்டைக்காய் - 2
  • கேரட் ‍ 1
  • கத்தரிக்காய் - 2
  • உருளைக்கிழங்கு ‍ 1
  • காலிஃப்ளவர் - சிறிது
  • முருங்கைக்காய் - 1
  • புளி - சிறிது
  • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

  • கடுகு - சிறிதளவு
  • சீரகம் - சிறிதளவு
  • முந்திரிப் பருப்பு - 3~5
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 10~15

செய்முறை:


  • துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, சீரகம், முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது நேரத்தில் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.
  • அரிந்த காய்கறிகளை சில நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் பொடி சேர்த்து, ஊற வைத்த பருப்பு, அரிசி சேர்த்து, அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
  • அரிசி, காய்கறிகள் பாதி வெந்த நிலையில் தக்காளி சேர்க்கவும்.
  • முக்கால்வாசி வெந்த பின், அரைத்து வைத்த பிஸிபேலாபாத் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்க்கவும்.
  • தேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்து, சாதமும் வெந்த நிலையில் கொத்தமல்லி தூவி, விரும்பினால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.
  • சூடான, சுவையான .... ஆங் ... பிஸிபேலாபாத் ரெடி :)) சுவைத்து மகிழுங்கள் !

Sunday, March 15, 2009

மிளகாய் சட்னி



இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை :))

ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாளைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

தேவையானவை:

  • வரமிளகாய் - 10 - 12
  • பூண்டு - 4 பல்
  • சின்ன வெங்காயம் - 10 - 15
  • தக்காளி - 2
  • புளி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை:

  • தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • சிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • எண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.
  • நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.


குறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் ... :)

Saturday, February 14, 2009

வாழைப்பூ வடை



தேவையானவை:
  • வாழைப்பூ
  • கடலை பருப்பு - 1 கப்
  • வர மிளகாய் - 4 ~ 6
  • பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 2
  • கறிவேப்பிலை - 10~15 இலைகள்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • கடலைப் பருப்பை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பூவை பிரித்து, உள்ளிருக்கும் நரம்புகளை நீக்கவும்.
  • வானலியில் எண்ணை விட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • வாழைப்பூவில் கொஞ்சம் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
  • அரைத்த வாழைப்பூவைப் பிழிந்து, தண்ணீரை அகற்றி விடுங்கள்
  • மிக்ஸியில் வரமிளகாய், பெருஞ்சீரகம் மற்றும் ஊறிய கடலைப் பருப்பையும் சேர்த்து 70% அரைக்கவும்.
  • அரைத்த பருப்புடன், மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய் துறுவல், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வாழைப்பூ சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்.