Wednesday, December 25, 2013

தேங்காய் வெங்காயச் சட்னி

சமையல் பலவிதம் சட்னிகள் ஒவ்வொன்று புதுவிதம்.  தேங்காய்ச் சட்னியோ, தக்காளிச் சட்னியோ தான் அநேக தமிழ்க் குடும்பங்களில் பிரதானமாகத் தொட்டுக் கொள்ளச் செய்யப்படுகிறது.  'இன்றைக்கு இட்லிக்கு என்னம்மா தொட்டுக்கொள்ள?' என்று கேட்கும் பிள்ளைகளுக்கு மேலே கூறிய சட்னியைச் சொல்லும்போதே, 'ஓ அப்படியா' என்று அலுப்பு தட்டும் குரல் தான் கேட்கிறது.  செய்வதற்கு மிக எளிதான இந்த சட்னியை இன்று வீட்டில் செய்கையில் பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி.




தேவையானவை:

  • தேங்காய் - அரை மூடி
  • சின்ன வெங்காயம் - 5-7
  • வரமிளகாய் - 3
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவயான அளவு


தாளிக்க:

  • கடுகு
  • கறிவேப்பிலை
  • வரமிளகாய் - 1 சிறியது


செய்முறை:

  • தேவையானவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தாளிக்கும் பொருட்களைத் தாளித்து அரைத்த சட்னியில் மேல் விடவும்.



தென்னிந்தியத் தாளி

சமீபத்தில் தூர தேச பயணமாக ஆஸ்டின் வரை சென்று வர நேர்ந்தது.  வழியிலோ டாலஸ், தேசிக்களின் இந்தியா !!!  அதுவும் தென்னிந்தியாவுக்கு பெயர் பெற்றுத் தந்த உயர்தர சைவ உணவகம் சரவண பவன்.  விடுவோமா ?!  போகும் போது ஒரு முறை, ஆஸ்டினிலிருந்து திரும்பும்போது ஒரு முறை.  அடடா, குளிரில் கதவைத் திறந்தால், நம்மை முகத்தில் அறைந்து வரவேற்பது சரவணபவனின் சமையல் மணம்.

நடுங்கும் குளிரவில் ஒரு ஃபுல் மீல்ஸ் சொல்ல, அக்கம்பக்க மேசையில் இருந்தவர்கள் சற்று எங்களை ஒரு மாதிரி பார்க்கத் தான் செய்தார்கள்.  அநேகரின் மேசைகளில் தோசையும், பட்டூராவும் அலங்கரித்திருந்தன.   இதற்கெல்லாம் தளர்ந்துவிடுவோமா, என்ன ?  ஒரு பிடி பிடிக்கத் தான் செய்தோம்.  பிள்ளைகள் வழக்கம் போல சாதம் தவிர்த்து, பரோட்டாவும், பட்டூராவும் கேட்டுப் பெற்றனர்.

வீடு வந்து சேர்ந்தும், சரவணபவன் மணம் விட்ட பாடில்லை. தென்னிந்தியத் தாளி வீட்டில் செய்து பார்த்தால் என்ன என்று ஒரு எண்ணம்.  தோன்றிய நேரத்திலேயே பிள்ளைகள் லிஸ்ட் அடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  காரியத்தில் தொபுக்கடீர் என்று  குதித்து ஒரு முழுச் சாப்பாடு தயார் ஆன நிலையில், ஆஹா நமது வலை அடுப்படி அப்படியே கிடக்கிறதே என்ற எண்ணம் தோன்ற, இன்றைய சமையலின் புகைப்படத்தை இங்கே பகிர்ந்து, மேலும் பல நல்ல செய்முறைகளுடன் இனி அடிக்கடி சந்திப்போம் என்று சொல்லி மீண்டும் காலடி எடுத்து வைக்கிறேன்.  வழக்கம் போல உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் !!!