Sunday, March 15, 2009

மிளகாய் சட்னி



இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை :))

ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாளைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

தேவையானவை:

  • வரமிளகாய் - 10 - 12
  • பூண்டு - 4 பல்
  • சின்ன வெங்காயம் - 10 - 15
  • தக்காளி - 2
  • புளி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை:

  • தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • சிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • எண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.
  • நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.


குறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் ... :)

Saturday, February 14, 2009

வாழைப்பூ வடை



தேவையானவை:
  • வாழைப்பூ
  • கடலை பருப்பு - 1 கப்
  • வர மிளகாய் - 4 ~ 6
  • பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 2
  • கறிவேப்பிலை - 10~15 இலைகள்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • கடலைப் பருப்பை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பூவை பிரித்து, உள்ளிருக்கும் நரம்புகளை நீக்கவும்.
  • வானலியில் எண்ணை விட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • வாழைப்பூவில் கொஞ்சம் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
  • அரைத்த வாழைப்பூவைப் பிழிந்து, தண்ணீரை அகற்றி விடுங்கள்
  • மிக்ஸியில் வரமிளகாய், பெருஞ்சீரகம் மற்றும் ஊறிய கடலைப் பருப்பையும் சேர்த்து 70% அரைக்கவும்.
  • அரைத்த பருப்புடன், மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய் துறுவல், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வாழைப்பூ சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்.

Thursday, January 29, 2009

உளுந்து வடை



மிக எளிய முறையில், சாஃப்டா (சத்தமே போடாம :))) ஒரு மெதுவடை செய்யலாம் வாங்க ...

தேவையானவை:


உளுந்து - 1 கப்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10-15 இலைகள்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • உளுந்தை, குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் ப.மிளகாய் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
  • இதனோடு ஊறிய உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். நடுவே உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
  • வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • நன்கு அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து, கையில் பிசறவும்.
  • தண்ணீர் தொட்டு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் போடவும்.
  • சிறிது நேரத்தில் திருப்பி விட்டு, பொன்னிறமாக ஆகும் சமயம் (அல்லது எண்ணை குமிழிகள் குறைந்த நேரம்) எடுத்து விடலாம்.

டிப்ஸ்:
  • வடை கடினமாக இருக்கிறது என்றால், மாவில் தண்ணீர் தெளித்து, மீண்டும் கொஞ்ச நேரம் அரைக்கவும்.
  • வடை எண்ணை குடிப்பது போல் இருந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

Thursday, January 1, 2009

மா உருண்டை



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

மிக மிக எளிதான ஒரு ஸ்வீட் செய்யலாம் இன்னிக்கு.

தேவையானவை:

  • பாசிப்பருப்பு மாவு - 1 கப்
  • பொடியாக்கிய சர்க்கரை - 1 கப்
  • நெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:
  • பாசிப்பருப்பை நன்கு வறுத்து, மிஷின் அல்லது மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் பாசிப்பருப்பு மாவு எடுத்துக் கொள்ளவும்.
  • பௌடர்ட் சுகர் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது. இல்லை என்றால், சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் எடுத்து, பாசிப்பருப்பு மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • அடுப்பை மீடியம் சூட்டில் வைத்து, வானலியில் நெய் விட்டு சூடாக்கவும்.
  • மெல்லிய சூடான நெய்யில், மாவுக் கலவையை சேர்த்து கலக்கி, மாவில் மிதமான சூடு ஏறியவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • கட்டிகள் இல்லாமல் மாவை நன்கு பிசறவும். பின், சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
  • அழகான சுவையான மா உருண்டை ரெடி.

Monday, July 21, 2008

கவுணி அரிசி



தேவையானவை:

  • ப்ரௌன் அரிசி - 1 கப்
  • சீனி - 1/4 to 1/2 கப்
  • தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்

செய்முறை:

  • அரிசியை, நீரில் இருபத்திநான்கு மணி நேரம் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் அரிசியை இட்டு, அதற்கும் மேல் ஒரு செ.மீ. அளவிற்கு நீர் சேர்க்கவும்.
  • ப்ரெஷர் குக்கரை அடுப்பில் ஏற்றி, கீழே சிறிது நீர் விட்டு, அரிசி பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
  • முதல் விசில் வந்தவுடன், சிம்மில் வைத்து இருபத்தி ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் அடுப்பை அனைத்து, ப்ரஷர் நீங்கியவுடன், அரிசியை நன்றாக மசித்து விடவும்.
  • சீனி, தேங்காய் துறுவல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • சூடான, சுவையான கவுணி அரிசி தயார்.
குறிப்பு: ப்ரௌன் அரிசி இங்கு சீனர்கள் கடைகளில் கிடைக்கிறது.


Sunday, April 6, 2008

தேன்குழல் - NRI Version



தேவையானவை:

அரிசி மாவு : 4 1/2 cup
உளுத்த மாவு : 1 cup
சீரகம் : ஒரு teaspoon
பட்டர் : ஒரு teaspoon
உப்பு : தேவையான அளவு
எண்ணை : டீப் ஃப்ரை பண்ணும் அளவிற்கு

செய்முறை:
  • வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய விடவும்.

  • அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், பட்டர் எல்லாம் கலந்து, சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். சப்பாத்தி மாவு அளவிற்கு consistency இருப்பது நல்லது.

  • சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, கொஞ்சம் பெரிய‌ கொழுக்கட்டை பிடிப்பது போல் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

  • எண்ணை நன்கு காய்ந்ததும், ஒரு கொழுக்கட்டை மாவை எடுத்து, தேன்குழல் (முறுக்கு) கட்டையில் வைத்து இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் பிழியவும்.

  • நன்கு நுரை தள்ளும் அலை போல எண்ணை இருக்க வேண்டும். அப்பொழுது தான் தேன்குழல் நன்றாக‌(பூசினாற்போல்) புஸ்ஸென்று இருக்கும்.

  • நுரை வேகம் குறையும்போது தேன்குழல்களைத் திருப்பிவிடுங்கள்.

  • நுரை மறையும் போது அல்லது சிலநொடிகள் முன்னரே அல்லது நிறம் மாறும் நேரம் தேன்குழலை எடுத்து விடலாம்.

  • நொடிகளில் நொறுக்கிட தீனி ரெடி :)
இந்தியாவில் தேன்குழல் மாவு என்றே முறையாகச் செய்வார்கள். இங்கு வந்து அது கைகூடக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. அதனால் அரிசி, உளுந்து மாவுகள். வீட்டில் செய்து பார்த்தோம், நன்றாக வரவே இப்பொழுது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Saturday, February 16, 2008

குழிப் பணியாரம்



தேவையானவை:
  1. 1 1/2 கப் பச்சரிசி
  2. 1 1/2 புழுங்கல் அரிசி
  3. 1/2 கப் உளுத்தம் பருப்பு
  4. சிறிது வெந்தயம்
  5. வெல்லம் ‍
  6. உப்பு
  7. பச்சை மிளகாய்
  8. தேங்காய் துருவல்
  9. கறிவேப்பிலை

செய்முறை:

  • இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.
  • பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.
  • சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் :)

முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்

  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.
  • புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
  • அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

இரண்டாவது மாங்காய்: வெள்ளை

  • வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.

இப்ப பணியாரம்:

  • அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.
  • சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
  • சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.
  • சில விநாடிகளில் பணியாரம் ரெடி.